Tuesday, October 1, 2013

வேர்ட் டிப்ஸ்-ஹைலைட்டிங்

ஹைலைட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்து முடித்தவுடன், அதனைப் படிப்பவரின் கவனத்தைச் சில சொற்கள் பால் ஈர்க்க வேண்டும் என விரும்புவோம். அதற்காக அவற்றை போல்டு செய்தாலோ, அல்லது சாய்வாக அமைத்தாலோ அது பிற விளைவுகளைப் படிப்பவர்கள் பால் ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக ஹைலைட் செய்திடலாம். மெல்லிய வண்ணங்களில் அவற்றை அமைத்திடலாம். இதற்கு வேர்டில் உள்ள ஹைலைட் டூல் அழுத்த வேண்டும். வழக்கமாக நாம் ஹைலைட் பேனா கொண்டு என்ன செய்வோமோ, அதன்படி இதிலும் செய்திடலாம். இதனுடைய அடிப்படை வண்ணம் மஞ்சள். ஒரு வரிசையில் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மூன்று வரிசைகள் மூலம் 15 வண்ணங்களை அமைக்கலாம். இந்த டூல் பாரைத் தேர்ந்தெடுத்தவுடன் பென்சில் போல கர்சர் கிடைக்கும். அதனைக் கொண்டு ஹைலைட் செய்திட வேண்டிய டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்திடலாம். ஹைலைட் செய்ததை நீக்கிட None என்பதைத் தேர்ந்தெடுத்து ஏற்கனவே அமைத்ததன் மீது இழுக்க வேண்டியதுதான். 
புல்லட் எண்களை நிறுத்த: வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரிக்கும் போது, நீங்கள் 1,2, என பட்டியலிடத் தொடங்கினால், வேர்ட் உடனே அதனைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை என்டர் தட்டும்போதும், வரிசையாக எண்களை அமைக்கும். ஒரு டேப் இடைவெளி விட்டு இது அமைக்கப்படும். இது நமக்கு வசதிதான். இதில் எங்கு பிரச்னை எழுகிறது என்றால், நாம் அனைத்தையும் முடித்த பின்னரும், இந்த புல்லட் எண்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனை நிறுத்த பல வழிகள் இருந்தாலும், எளிய வழி பேக் ஸ்பேஸ் கீயை அடுத்தடுத்து இரு முறை அழுத்துவதுதான். முதல் அழுத்தலில் இறுதியாகத் தேவைப்படாத எண் அழியும். பின் டேப் இடைவெளி நீக்கப்படும். பின் வழக்கம்போல நீங்கள் டெக்ஸ்ட்டை என்டர் செய்திடலாம். 
டேபிள் படுக்கை வரிசை பிரியாமல் இருக்க: டேபிள்களை வேர்ட் டாகுமெண்ட்டில் அதிகம் பயன்படுத்துகிறோம். டேபிள் மிகப் பெரியதாக அமைக்கும் நிலையில், அதில் உள்ள படுக்கை வரிசை பிரிந்து அமைய வாய்ப்புகள் உண்டு. ஒரு பக்கத்தின் இறுதியில் கொஞ்சமும், அடுத்த பக்கத்தில் மிச்சமும் அமையும் படி ஒரு படுக்கை வரிசை அமையலாம். இது டேபிளின் அமைப்பை வித்தியாசமாகக் காட்டுவதுடன், அந்த வரிசையில் உள்ள டேட்டாக்களைத் தேடிக் கண்டறியும் சூழ்நிலையை உருவாக்கும். எனவே இது போன்று பிரிக்கப்படுவதனை நாம் விரும்ப மாட்டோம். அவை பிரிக்கப்படாமல் காட்டப்பட வேண்டும் என வேர்ட் தொகுப்பில் செட் செய்திடலாம். 
1. எந்த வரிசையினைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும். 
2. டேபிள் மெனுவில் இருந்து செல் உயரம், அகலம் (Cell Height and Width) சார்ந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸ் காட்டப்படும். 
3. இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Allow Row to Break Across Pages என்ற வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 
4. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
உங்களிடம் வேர்ட் 2000 அல்லது அதற்குப் பின் வந்த தொகுப்பு எனில் சற்று மாறுதலாக இதனை செட் செய்திட வேண்டும். 
1. முதலில் பிரிக்கக் கூடாத படுக்கை வரிசையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
2. டேபிள் மெனுவிலிருந்து Table Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Row என்ற டேப்பைக் கிளிக் செய்திடவும். 
3. இதில் Allow Row to Break Across Pages என்ற இடத்தில் உள்ள செக் பாக்ஸை கிளியர் செய்திடவும். 
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். எந்த படுக்கை வரிசை பிரியப் போகிறது என்று முன் கூட்டியே நமக்குத் தெரியாது. இந்நிலையில் எப்படி அதனைத் தேர்ந்தெடுத்து அமைப்பது. அமைத்தபின்னர் வரிசையைத் தேர்ந் தெடுத்து, செட் செய்வது நேரம் எடுக்கும் செயல் அல்லவா? மேலும் மேலே உள்ள வரிசைகளில் டேட்டா கூடுதலாக அமைக்கும் நிலையில் கீழே உள்ள வரிசை பிரியலாம் அல்லவா? இந்த கேள்விகள் நமக்கு நிச்சயம் ஏற்படும். எனவே குறிப்பிட்ட படுக்கை வரிசைக்குப் பதிலாக, அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுத்து மேலே காட்டியபடி செட் செய்து விட்டால் எந்தப் பிரச்னையும் எழாது.

No comments:

Post a Comment