Saturday, October 5, 2013

வேர்ட் டிப்ஸ்-பக்க எண்களை பார்மட் செய்திட

பக்க எண்களை பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது.
நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் கிளிக் செய்திடவும். பின்னர், பேஜ் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பின் மற்ற சொற்களை பார்மட் செய்வது போல இதனையும் பார்மட் செய்திடலாம். நீங்கள் ட்ராப்ட் அல்லது அவுட்லைன் மோடில் வேலை செய்தால், பிரிண்ட் லே அவுட் வகைக்கு மாறினால் தான், இதனை மேற்கொள்ள முடியும். நீங்கள் ரிப்பனில், ஹெடர் அல்லது புட்டர் பெறுவதற்காக, இன்ஸெர்ட் டேப்பினைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் தானாகவே, பிரிண்ட் லே அவுட் வியூவிற்கு மாறிக் கொள்வதனைக் காணலாம்.
மேலே தரப்பட்டுள்ள குறிப்பினைப் படித்துவிட்டு, வேர்டின் முந்தைய தொகுப்பில் இந்த வசதி எப்படி கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கான குறிப்பு இதோ:
மேலே தரப்பட்டுள்ளபடியே, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் டபுள் கிளிக் செய்திடவும். பக்க எண்ணைத் தேர்ந்தெடுத்து, நீங்களாகவே அதனை பார்மட் செய்திடலாம். (பக்க எண்களை நீங்கள் முதலில் இந்த ஆவணத்தில் அமைத்திருக்க வேண்டும்.)
நீங்கள் நார்மல் அல்லது அவுட்லைன் வியூவில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், ஹெடர் அல்லது புட்டரை நீங்கள் முதலில் திறந்தாக வேண்டும். இதனைக் கீழே கொடுத்துள்ளபடி செயல்பட்டால் கிடைக்கும்.
எந்த பிரிவின் பக்க எண்ணை மாற்ற வேண்டுமோ, அந்தப் பிரிவில் கர்சரைக் கொண்டு சென்று வைத்திடவும். பின்னர் View மெனுவில் இருந்து Header and Footer தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and Footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இனி வழக்கமான டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பது போல, பக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். நீங்களாக, அதனைப் பார்மட் செய்திடவும். அதன் பின்னர் டயலாக் பாக்ஸினை மூடி வெளியேறவும்.
டாக்மெண்ட் இடையே பார்மட் மாற்றம்: வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிய பின்னர், குறிப்பிட்ட பக்கத்தில், டெக்ஸ்ட்டை இரண்டு அல்லது மூன்று நெட்டு பத்திகளில் (Columns) அமைக்க விரும்புவோம். இந்தப் பக்கத்தில் மட்டும் எப்படி இந்த வகையில் பார்மட் செய்திட முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். உங்களுடைய வேர்ட் தொகுப்பு வேர்ட் 97 முதல் வேர்ட் 2003 ஆக இருந்தால்,
1. நெட்டு பத்திகளில் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் Columns என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Columns என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் Number of Columns என்ற பீல்டில், நீங்கள் எத்தனை நெட்டு பத்திகள் அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த எண்ணைத் தரவும்.
4. இங்கு Apply To என்ற பெட்டியில் Selected Text என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால், வேர்ட், நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை, அமைக்க விரும்பிய பத்திகளை அமைத்து பக்கத்தை வடிவமைத்திருக்கும். மற்ற பக்கங்களில் மாற்றங்கள் இருக்காது.
நீங்கள் வேர்ட் 2007 மற்றும் 2010 பயன்படுத்துவதாக இருந்தால்:
1. நெட்டு பத்திகளில் வரவேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் இருந்து Page Layout என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Page Setup குரூப்பில் Columns என்ற கீழ்விரி பட்டியலைக் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து எத்தனை பத்திகள் என்ற எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். ஓகே கொடுத்து வெளியேறவும்.
இனி டெக்ஸ்ட் பத்திகளில் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment