Saturday, March 29, 2014

நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை



ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்” வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, காஸ்பெர்ஸ்கி லேப் அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் எந்த நாட்டிலும், எந்த வங்கியின் தளத்தையும் கைப்பற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வங்கி பாதுகாப்பு சிஸ்டத்தின் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் இது சந்திக்கிறது. அவற்றில் web injection, remote system access, மற்றும் social engineering ஆகியவை அடங்கும்.
கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றுவது மட்டுமின்றி, தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் தன்மையும் கொண்டதாக இந்த நெவர்க்வெஸ்ட் வைரஸ் உள்ளது. இதனால், உலக அளவில், இது தாக்கிய கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை விரைவில் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கும் பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, வங்கிகளுக்கும் நிதி இழப்பு ஏற்படலாம்.
விடுமுறை நாட்களில் இது வேகமாக இயங்கி கம்ப்யூட்டர்களைத் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்
பட்டுள்ளது. இந்த வைரஸ் மூலம் திருடப்பட்ட பணம் எந்த அக்கவுண்ட்களில் சேர்க்கப்படுகின்றன என்று விழிப்பாக இருந்து கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெவர் க்வெஸ்ட், வங்கிகளின் கணக்கு வைத்து ஆன்லைன் செயல்பாட்டினை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுகிறது. வாடிக்கையாளர்கள், வங்கிகளின் இணைய தளத்தில் அமைக்கும் தகவல்களையும் திருடுகிறது. இந்த வைரஸ் இயங்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்கென தனிக் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்த பின்னர், நெவர் க்வெஸ்ட் வைரஸைக் கையாளும் ஹேக்கர்கள், தங்கள் அக்கவுண்ட்களுக்குப் பணத்தை மாற்றுகின்றனர். வரும் மாதங்களில், இந்த நடவடிக்கை பல நாடுகளுக்குப் பரவும் அபாயம் உள்ளதாகவும், காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment