Thursday, June 19, 2014

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானமா? வரியில் இனி, ரூ.7210 மிச்சமாகும்


வருமான வரி விதிப்பு உள்பட மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று வழங்கியது. மக்களவையில் இந்த மசோதா வரும் 30ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
நாட்டில் தனி நபர் வருமானத்தில் ரூ.1.6 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு இந்த வரம்பு ரூ.1.8 லட்சமாக உள்ளது. வருமான வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை 6வது சம்பள கமிஷன் அறிக்கை அமலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேரடி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி, தற்போதுள்ள வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு 30 சதவீத வரியும் இனி வசூலிக்கப்படும்.
இதனால் ரூ.4 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.7210 மிச்சப்படும். ரூ.7 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 10300, 10 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு ரூ.18540 மிச்சப்படும். நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றுக்கான வரி 34 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான வரிவிதிப்பில் இனி கூடுதல் வரி மற்றும் உபவரிகள் போன்ற தொல்லை இருக்காது. உள்நாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு இந்த மசோதா வகை செய்கிறது.
வரிவிகிதங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும் பழைய நடைமுறை கைவிடப்படுகிறது. இந்த மசோதா மக்களவையில் வரும் 30ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

No comments:

Post a Comment