Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, December 18, 2013

இணையத்திலேயே படிக்கலாம்... வேலைக்கும் போகலாம்! படி... படி... அடுத்தபடி!

'உள்ளூர் மாடு விலைபோகாது’ என்றொரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் தமிழ்மொழியும் ஆகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், தமிழ் படிப்பதைக் கேவலமாக நினைப்பவர்கள் பெருகி வருகிறார்கள். ஆனால், தமிழ் மொழியின் மகத்துவம் அறிந்த பலர், உலக அளவில் இணையம் வழியாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார்கள்!
தமிழக அரசால் 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (தமிழ் இணைய கல்விக்கழகம்) மூலம்தான் பலரும் இப்படி தமிழ் கற்கிறார்கள். இதன் மூலமாக மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா மட்டு மின்றி, உலகெங்கும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் உள்ள 'தொடர்பு மையங்கள்’ மூலமாக, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்போது தமிழ் படித்து வருகிறார்கள்!
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா... உங்களுக்கும் இணைய வாயிலாக தமிழ் கற்க விருப்பமா... வாருங்கள் கற்போம்!
மழலைக்கல்வி!
இளங்குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாக... பாடங்களை பாடல்கள், காட்சிகள், கதைகள் ஆகியவற்றின் மூலமாக பார்த்தும், கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் 'மழலைக் கல்வி’ என்ற பிரிவில் பாடங்கள் தரப்பட்டுள்ளன. இதில் எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச்சொற்கள், எண்கள் ஆகியவை... படங்கள், இயக்கப் படங்கள், ஒலி - ஒளி காட்சிகள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதில் வயது வித்தியாசமின்றி, யார் வேண்டுமானாலும் சேர்ந்து அடிப்படைத் தமிழ் கற்கலாம். இதற்கெனத் தனியாகத் தேர்வுகள் கிடையாது. இதில் கற்றுக்கொள்ளும் பாடங்கள், சான்றிதழ் கல்வியில் சேர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.
சான்றிதழ் கல்வி!
சான்றிதழ் கல்வி, 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசு கல்வித்திட்டத்தின்படி வகுக்கப்பட்டுள்ளது. இதில், அடிப்படைநிலை (1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை), இடைநிலை (3-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை), மேல்நிலை (5-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை) என மூன்று நிலைகள் உள்ளன. இதில் சேர, முன்தகுதியோ, வயது வரம்போ தேவை இல்லை. அவரவர் தகுதி நிலைக்கேற்பச் சான்றிதழ் கல்வியில் சேர்ந்து படிக்கலாம். இரு பருவங்களில் (ஒரே ஆண்டில்) முடிக்கிற வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நிலைக்கும் பதிவுக் கட்டணமாக இந்திய மாணவர்கள் 300 ரூபாயும், வெளிநாட்டு மாணவர்கள் 12 டாலரும் செலுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்தவர்கள் 6 டாலர் செலுத்தினாலே போதுமானது. ஒரு நிலைக்கு தேர்வுக் கட்டணமாக, இந்திய மாணவர்கள் 100 ரூபாயும், வெளிநாட்டு மாணவர்கள் 3 டாலரும் செலுத்த வேண்டும்.
காட்சித்தேர்வு (அடிப்படை நிலைக்கு மட்டும்), வாய் மொழித்தேர்வு (அடிப்படை நிலைக்கு மட்டும்), இணைய வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு என நான்கு வகைகளில் தேர்வு நடத்தப்படும். இணைய வழித்தேர்வுக்கான வினாக்களை, கணினி மூலமாகவே வினா வங்கியிலிருந்து தானாகத் தொகுத்து வழங்குமாறும், கணினி மூலமாகவே திருத்தி மதிப்பெண் வழங்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை, மாணவர்கள் தொடர்பு மையங்கள் மூலமாக எழுத வேண்டும். ஒவ்வொரு பருவத்தேர்வுகளும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
மேற்சான்றிதழ் கல்வி!
தமிழ்நாடு அரசின் 7 முதல் 12 வகுப்பு வரை உள்ள கல்வித் திட்டத்தின்படி மேற்சான்றிதழ் கல்வி வழங்கப்படுகிறது. இதிலும் சான்றிதழ் படிப்பைப் போலவே... மேற்சான்றிதழ் நிலை-1 (7-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை), மேற்சான்றிதழ் நிலை-2 (9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை), மேற்சான்றிதழ் நிலை-3 (11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) என மூன்று நிலைகள் உள்ளன. இவற்றில் சேர வயது வரம்பு இல்லை. ஆனால், சான்றிதழ் படிப்பில் இணைய வழித்தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் எடுக்கும் சராசரி மதிப்பெண்கள், குறைந்தது 40 சதவிகிதம் இருக்க வேண்டும். இரு பருவங்களில் (ஒரே ஆண்டில்) முடிக்கிற வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் கல்விக்கான கட்டண விகிதமே இதற்கும் பொருந்தும். இரண்டு இணைய வழித்தேர்வும், ஒரு நேரடி எழுத்துத் தேர்வும் நடத்தப்படும்.
இந்த இரண்டு படிப்புக்கும் தேர்வுகளில் பங்குபெறுவது கட்டாயம் இல்லை. சான்றிதழ் வேண்டுவோர் மட்டும் தேர்வு எழுதலாம்.
பட்டயம், மேற்பட்டயம், பட்டம்!
ஓராண்டு படிப்பாக பட்டயம் (Diploma), மேற்பட்டயம் (PG Diploma) படிப்புகளும்... மூன்றாண்டு படிப்பாக பட்டப் படிப்பும் (Degree) நடத்தப்படுகிறது. இவற்றில் தேர்ச்சி பெற்றால், அது மற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டயம், மேற்பட்டயம், பட்டம் ஆகியவற்றுக்கு நிகராகக் கருதப்படும். 'டிப்ளோமோ’ மற்றும் பி.ஏ. தமிழுக்கு இணையான இளநிலை தமிழியல் பட்டம் வழங்கப்படுகிறது. இதனைப் பெறுவதன் மூலம் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் பெற முடியும். இதில் சேர தகுதி... ப்ளஸ் டூ தேர்ச்சி அல்லது அதற்கு இணையாக தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மேற்சான்றிதழ் மற்றும் அதற்கு இணையான வேறு ஏதாவது படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. ஆண்டுக்கு இரு பருவங்களாக (ஓர் ஆண்டில்) தேர்வுகள் நடத்தப்படும். பட்டப்படிப்புக்கு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும்கூட தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு தாளுக்கும் பதிவுக்கட்டணமாக இந்திய மாணவர்கள் 300 ரூபாயும், வெளிநாட்டு மாணவர்கள் 12 டாலரும் செலுத்த வேண்டும். இலங்கை மாணவர்களுக்கு மட்டும் 6 டாலர் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கட்டணமாக, ஒவ்வொரு தாளுக்கும் இந்திய மாணவர்கள் 100 ரூபாயும், வெளிநாட்டு மாணவர்கள் 3 டாலரும் செலுத்த வேண்டும்.
தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் இணைய வழியாக 12 பிரிவாக நடத்தப்படும். இறுதித்தேர்வு எழுத்துத் தேர்வாக தமிழ் இணைய கல்விக்கழகத்தின் தொடர்பு மையங்களில் ஆண்டுக்கு இரண்டு பருவங்களாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். முடிவுகள் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இணையத்தில் வெளியிடப்படும். மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும். பட்டங்கள் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும், அவர்களுடைய தொடர்பு மையங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
இணைய நூலகம்!
'தமிழ் இணைய கல்விக்கழக’த்தின் வலைதளத்தில் தேவையான தமிழ்ப் பாட நூல்களைப் படிக்க உதவியாக மின் நூலகம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாடத்திட்டங்களுக்கான பாடநூல்களைத் தவிர, ஆயிரக்கணக்கான நூல்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களின் படிப்பு வசதிக்காக இணைய வகுப்பறைகளும் உண்டு. தகவல்கள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவையும் இணையதளத்திலேயே உண்டு. தமிழர் பண்பாட்டை எடுத்துச் சொல்கிற வகையில் புகழ் பெற்ற திருத்தலங்கள், திருவிழாக்கள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் போன்றவை அடங்கிய 'பண்பாட்டு காட்சியகமும்’ வலைதளத்தில் உண்டு. தவிர, அகராதிகள், கலைச்சொல் தொகுப்புகள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: தமிழ் இணைய கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை-600 025. 044-2220 1012, 044-2230 1012, 044-2230 1109,

No comments: