Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, March 15, 2014

தேவையான பாதுகாப்பு வளையங்கள்



விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்குப் பல வகையான புரோகிராம்களும், டூல்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் பல பிற நிறுவனங்கள், தங்கள் தொகுப்புகளை வாங்கிப் பயன்படுத்துமாறு தொடர்ந்து விண்டோஸ் பயன்படுத்துபவர்களை இணைய தளங்கள் மற்றும் மின் அஞ்சல் வழியாக அணுகி வருகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பலவகையான மால்வேர் மற்றும் வைரஸ் அச்சுறுத்தல்களால், நாமும் இலவசமாகக் கிடைப்பனவற்றையும், கட்டணம் செலுத்திப் பெறக் கூடிய புரோகிராம்களையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையில் எதனைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனே அதனையும் போட்டு வைப்போமே என்ற எண்ணம் தான் நம்மிடையே நிலவி வருகிறது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில், பலவகையான பாதுகாப்பு புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், இவை அனைத்துமே மொத்தமாக கம்ப்யூட்டர் ஒன்றில் தேவை இல்லை. முழுமையான பாதுகாப்புடன் இயங்க என்ன வகை புரோகிராம்கள் அல்லது நடவடிக்கைகள் குறைந்த பட்சம் தேவையாக இருக்கும் என்று இங்கு காணலாம். 

1. ஆண்ட்டி வைரஸ்:
 விண்டோஸ் இயங்கும் சிஸ்டத்தில், கட்டாயமாக வேண்டிய ஒரு பாதுகாப்பு புரோகிராம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகும். நீங்கள் எந்த ஒரு புரோகிராமையும் டவுண்லோட் செய்திடவில்லை என்றாலும், புதியதாக அறிமுகமாகும் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் கம்ப்யூட்டரைத் தாக்கலாம்.
தற்போது கிடைக்கும் எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் முழுமையான பாதுகாப்பினைத் தருவதாக இல்லை. ஏதேனும் ஒரு வகையில், பாதுகாப்பினைக் கோட்டை விடுவதாகவே இவை உள்ளன. எனவே, நாம் நம் அனுபவத்தில் நம்பிக்கை வைக்காத ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை விட்டுவிட்டு, சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கட்டணம் செலுத்தி, பல இணைப்பு புரோகிராம்களுடன், பெரிய அளவில் எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் அமைக்க வேண்டாம். இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அமைத்தாலே போதுமானது. ஆனால், கட்டாயம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று அவசியமாய் இயங்க வேண்டும்.
2. பேக் அப் சாப்ட்வேர்: நம் பைல்களை பேக் அப் எடுப்பதனை வழக்கமான ஒரு செயலாக மேற்கொள்ள வேண்டும். பலர் இதனை மிகவும் அக்கறையுடன் மேற்கொள்வதில்லை. ஹார்ட் ட்ரைவ் கிராஷ் ஆகி அதில் உள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாமல் போகும் நிலையில்தான், ""அய்யோ! பேக் அப் எடுக்காமல் போனேனே” என்று வருத்தப்படுகின்றனர். இவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம். குறிப்பிட்ட கால அளவில் பைல்களை பேக் அப் எடுத்துக் கொள்ளவும். அத்துடன், ட்ராப் பாக்ஸ், ஸ்கை ட்ரைவ் போன்ற க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் பேக் அப் வசதிகளைப் பயன்படுத்தி, அவற்றிலும் உங்கள் பைல்களின் பேக் அப் காப்பிகளைப் பதிந்து வைக்கவும்.
3. தற்காலிக பைல்களை நீக்கும் புரோகிராம்: உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில், பல பைல்கள் தற்காலிகத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. இவை கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொண்டு, நம் பயன்பாட்டிற்கு இடம் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. இதனாலேயே, கம்ப்யூட்டர் இயங்கும் வேகமும் படிப்படியாகக் குறைகிறது. எனவே, இவற்றை அடிக்கடி நீக்க வேண்டும். இந்த வகையில் அனைவரும் விரும்பும் புரோகிராம் சிகிளீனர் (CCleaner) ஆகும். அல்லது விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup டூலையும் பயன்படுத்தலாம்.

4. விண்டோஸ் அப்டேட்: நாம் பயன்படுத்தும் சாப்ட்வேர் புரோகிராம்கள், நம் இணைய பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள், ப்ளாஷ், ஜாவா, ஏன் விண்டோஸ் கூட பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கும் குறியீடு பிழைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றை அவ்வப்போது கண்டறியும் இந்த புரோகிராம்களைத் தந்த நிறுவனங்கள் அவற்றைச் சரி செய்திடும் வகையில், அப்டேட் பைல்களை இலவச மாக இணையத்தில் அளிக்கின்றன. பாதுகாப்பாக கம்ப்யூட்டரை இயக்க வேண்டும் என்றால், அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளையும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். விண்டோஸ் மற்றும் முக்கியமான புரோகிராம்கள், தாங்களாகவே அப்டேட் செய்திடும் டூல்களுடன் உள்ளன. இவை தாமாகவே இயங்கி, நாம் இணைய இணைப்பில் இருக்கும்போது, தங்களை அப்டேட் செய்து கொண்டு நம்மிடமும் அது குறித்து அறிவிக்கின்றன. எனவே, இன்னொரு புரோகிராம் மூலம், இந்த சாப்ட்வேர் புரோகிராம்கள் அப்டேட் செய்யப்பட்டுவிட்டனவா எனச் சோதனையிட வேண்டியதில்லை.
இந்நிலையில் ஒன்று குறிப்பிட வேண்டியதுள்ளது. நீங்கள் ஜாவா இன்ஸ்டால் செய்திருந்தால், உடனடியாக அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும். பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஜாவா தற்போது உள்ளது. பெரும்பாலான இணையப் பயனாளர்கள், மிகப் பழைய ஜாவா புரோகிராம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இது இன்னும் மோசமானதாக்கும். பலருக்கு ஜாவா தேவை இருக்காது. எனவே, அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது. 

5. வேண்டாதவை:
 தற்போது கிடைக்கும் விண்டோஸ் பல வழிகளையும், தடைகளையும் தாண்டி வந்துள்ள ஒன்றாகும். பிரச்னைக்குரிய பலவற்றை ஆய்வு செய்து, பாதுகாப்பான இயக்கத்திற்கான, மேலே சொன்ன பல டூல்களை, தன் சிஸ்டத்திலேயே விண்டோஸ் கொண்டுள்ளது. எனவே, எவை தற்போது வேண்டாதவை என்று பார்க்கலாம்.
5.1. டிஸ்க் டிபிராக்மெண்டர் (Disk Defragmenter): டிஸ்க்குகளில் பதியப்படும் பைல்கள் தங்கும் இடங்களை ஒழுங்கு படுத்தும் வேலையை மேற்கொள்வதே டிஸ்க் டிபிராக்மெண்டர் டூலாகும். இப்போது விண்டோஸ் இயக்கத்திலேயே இது கிடைக்கிறது.நாம் செயல்படுகையில், பின்னணியில் இயங்கி, பைல்களை ஒழுங்கு படுத்துகிறது. எனவே, தனியாக இந்த டூல் இயக்கம் தேவை இல்லை.
5.2 பயர்வால்: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுத் தரப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டர்களுக்குள் வருபவனவற்றை வடிக்கடி அனுப்புகிறது. கம்ப்யூட்டரிலிருந்து வெளியேறுபவற்றை வடிகட்டத் தேவை இல்லையே.
5.3 பிஷ்ஷிங் பில்டர் (Phishing Filter): நீங்கள் குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது ஆப்பரா என எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதில் பிஷ்ஷிங் மற்றும் மால்வேர் பில்டர் டூல் ஒன்று இணைந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கும். எனவே, தனியாக மூன்றாவதான நிறுவன புரோகிராம் ஒன்றை இயக்கத் தேவை இல்லை. எடுத்துக்காட்டாக, ரெஜிஸ்ட்ரி கிளீனர், ட்ரைவர் கிளீனர், மெமரி ஆப்டிமைசர், கேம் பூஸ்டர் போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் எதுவும் தேவை இல்லை.
சில வேளைகளில், சூழ்நிலைகளைப் பொறுத்து சிகிளீனர் போன்ற தர்ட் பார்ட்டி டூல்கள் நமக்குத் தேவையாய் உள்ளன. நம் தேவைகளைப் பொறுத்து இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments: