Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, November 22, 2013

ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்

திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 
1. தேவையான ஒளி உணர்வலை (ambient light sensor): டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.
2. அருகமைவு உணர்வலை (Proximity sensor): இந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. காதருகே கொண்டு சென்றவுடன், திரைக் காட்சி அணைக்கப்படுகிறது. அத்துடன், தேவையற்ற திரைத்தொடுதல்களை உணரா வண்ணம் செயல்படுகிறது. உங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்தும் செயல்படும். இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன. ஐபோனைப் பொறுத்தவரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, தொடு உணர்ச்சியினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல்பாட்டினையும் முடக்குகிறது. 
3. புவி இட நிறுத்தல் (GPSGlobal Positioning System): தொடக்கத்தில், இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1980க்கும் பின்னர், பொதுமக்களுக்கும் தரப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது. இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான சாட்டலைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து "Assisted GPS” என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது. நேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. ஐபோன் 3ஜி, 3ஜிஎஸ், 4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 4 எஸ், GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. 
4. அக்ஸிலரோமீட்டர் (accelerometer): ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. 
5. காம்பஸ் (Compass): அடிப்படையில் காம்பஸ் என்பது, புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட் போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது. 
6. கைரோஸ் (gyroscope): எந்தக் கோணத்தில் அசைவுகள் ஏற்படுகின்றன என்பதனைக் கண்காணித்து, அவற்றின் அளவுகளைக் கொண்டு செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பம் இது. ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி.க்கள், ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. சாதனம் ஒன்று எந்த நிலையில் உள்ளது என்பதனை இது கண்டறிகிறது. வயர்லெஸ் மவுஸ் செயல்பாட்டில் இது பயன் படுத்தப்படுகிறது. அக்ஸிலரோமீட்டருடன் இணைந்து இது செயல்படுகையில், ஓர் அசைவின் ஆறு திசைகள் இதன் மூலம் கண்டறியப்படுகின்றன. இடது, வலது, மேல், கீழ், முன்பாக மற்றும் பின்புறமாக என ஆறு நிலைகள் அறியப்பட்டு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் கை அசைவுகளுக்கேற்ற வகை யில் செயல்பாடுகள் மேற்கொள்ள இந்த தொழில் நுட்பம் பயன்படுகிறது.இத் தொழில் நுட்பத்தினை முதன் முதலில் பயன்படுத்திய ஸ்மார்ட் போன் ஐபோன் 4 ஆகும். தொடக்கத்தில் MEM எனப்படும் (Micro electromechanical systems) கைராஸ்கோப் பயன்படுத்தப்பட்டது. தற்போது இதன் இடத்தில், மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்படும் ஆப்டிகல் கைராஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒரு குண்டூசியின் தலையளவு இடத்தில் வைத்து இயக்கலாம். மருத்துவ துறையில், உடல் உள்ளாக வைக்கப்படும் சாதனங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
7. பின்புற ஒளியுடன் கூடிய புதிய (BSI or BI) சென்சார்: இது ஒரு டிஜிட்டல் இமேஜ் சென்சார். ஒரு இமேஜ் அமைந்துள்ள கூறுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில், ஒளியினைக் குறைத்து அமைக்கும் தொழில் நுட்பம். மிகக் குறைந்த ஒளியில் இயங்கும் பாதுகாப்பு பணிகளுக்கான கேமராவில் இது முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 
மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுவதனைக் காணலாம். இவை இன்னும் தொடர்ந்து ஆய்வில் மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் பயன் தரும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

No comments: