Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, January 8, 2014

இணையதளத்தில் பட்டா, சிட்டா விவரங்கள் கிடைக்க ஏற்பாடு : கணினிமயமாகிறது நில அளவை


தமிழகத்தில், நில அளவை, வருவாய், பதிவுத் துறைகளை, கணினி வலை அமைப்பு மூலம் ஒன்றிணைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிவடைந்த பிறகு, இணையதளம் மூலம், அனைத்து நிலங்கள் குறித்த பட்டா, சிட்டா விவரங்களை அறிந்து கொள்ளும் திட்டம், முழுமை பெறும்.
சென்னை மற்றும் இதர மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்க விரும்புவோருக்கு, விற்பனையாளர் காட்டும், பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு விவரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வதற்கான இணையதள வசதிகள் எதுவும், அரசு தரப்பில் இல்லை. இதனால், ஆவணங்கள் உண்மையானது தானா என்பதை சரிபார்க்க, வட்டாட்சியர் அலுவலகங்களையே, மக்கள் நம்ப வேண்டி உள்ளது. மேலும், நிலம் வாங்கியோர், தங்கள் பெயரில் உள்ள ஆவணங்கள், வேறு யார் பெயருக்காவது, முறைகேடாக மாற்றப்பட்டு உள்ளதா என்பதையும், தெரிந்துகொள்ள முடிவதில்லை.
கணினிமயமாக்கல் : கடந்த பல ஆண்டுகளாக, பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், கையால் எழுதப்பட்டே வந்தன. இதை, கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிதாக பதிவாகும் ஆவணங்கள், கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மட்டுமே, ஓரளவுக்கு இப்பணிகள் நடந்துள்ளன. கிராமப் பகுதிகளில், இன்னும் முழுமை பெறவில்லை.
எங்கும், எப்போதும் : இப்பணிகள், முழுமையாக முடியாத நிலையில், “எங்கிருந்தும், எந்நேரத்திலும்’ என்ற, இணையதளம் மூலம், நிலம் பதிவேட்டு விவரங்களை அறியும் புதிய திட்டத்தை, கடந்த 2008, மே மாதம், தமிழக அரசு துவக்கியது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வெளியில் உள்ள, விவசாய நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், இதில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான இணையதள முகவரி:taluk.tn.nic.in/eservicesnew/index.html இதன்மூலம், அனைத்து மாவட்டத்திலும் உள்ள, விவசாய நிலங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்; இதன் பிரதியை, பதிவிறக்கம் மற்றும் “பிரின்ட்’ எடுக்கலாம். இந்த வசதி, மற்ற குடியிருப்பு நிலங்களுக்கு இல்லை.
மத்திய அரசின் திட்டம் : இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுத் துறையும், வருவாய்த் துறையும் ஒருங்கிணைந்து, நில ஆவணங்களை செம்மைப்படுத்துதல்; அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை, தானாக ஏற்றுக் கொள்ளுதல்; நிலத்தின் பதிவுகளை ஒன்றிணைத்தல் ஆகிய பணிகளுக்காக, நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை, தேசிய அளவில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, தமிழகத்துக்கு, 2.81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 வட்டங்கள், நெல்லை மாவட்டத்தில், 11 வட்டங்களிலும், நகர்ப்புற நில ஆவணங்களின் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நில அளவை பயிற்சி மையத்தில், தேசிய நில அளவை ஆவணங்களை நவீனமாக்கும் மையம், புதிதாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.
தீர்வு எப்போது? : இதுதொடர்பாக, வருவாய் மற்றும் நில நிர்வாகத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில பதிவேடு ஆவணங்கள் அனைத்தையும் கணினிமயமாக்குவது, ஒரு குறிப்பிட்ட துறை மட்டும், தனியாக செய்து முடிக்கும் பணியல்ல. நில அளவை, வருவாய் மற்றும் பதிவுத் துறைகள் பணிகளை, முதலில், அந்தந்த துறை அளவில், கணினி வலை அமைப்பு மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதன்பின், இந்தத் துறைகளுக்குள், கணினி வலை அமைப்பு அடிப்படையில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதில் முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும், கணினிமயமாக்கப்பட்ட நில அளவைப் பிரிவை துவக்கும் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய வலையம் : அடுத்து, அனைத்து வட்ட அலுவலகங்களையும் ஒன்றிணைக்க, அகண்ட பரப்பு வலையம் (கூNகுஙிஅN) அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மேலும், வட்ட அலுவலகங்களில், பட்டா மாற்றல் தொடர்பான அனைத்து விவரங்களையும், உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும்; இதை, தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கவும், உரிய மென்பொருளை உருவாக்கும் பொறுப்பு, தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, தங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு விவரங்களை, இணையதளம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
“இ-பட்டா’ சாத்தியமா? : நில அளவை, வருவாய், பதிவுத் துறைகளை, கணினி வலை அமைப்பு மூலம் ஒன்றிணைத்தபின், பட்டா, சிட்டா விவரங்களை, இணையதளம் மூலம் பெறுவதுடன், ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும், வழங்கும் பணிகளும், ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படும். வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து, இணையதளம் மூலமாகவே, பட்டா, சிட்டா உள்ளிட்ட சேவைகளை, பொது மக்கள் பெறுவது சாத்தியமாகும். அப்போது தான், “இ-பட்டா’ முறை, தமிழகத்தில் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
ஆண்டுக்கு 35.18 லட்சம் ஆவணங்கள் : தமிழகத்தில், இப்போதைய நிலையில், ஆண்டுக்கு, 35.18 லட்சம் ஆவணங்கள், பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு, 6.6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பத்திரப் பதிவுகள், நகர்ப்புறம் சார்ந்த நிலம் விற்பனை மற்றும் பரிவர்த்தனை தொடர்புள்ளவை என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வருவாய்த் துறை மூலம், கடந்த ஓராண்டில் மட்டும், 14.60 லட்சம் பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளன.

No comments: