இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. குறிப்பாக, க்ளைம் சார்ந்த பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. க்ளைம் சார்ந்த பிரச்னைகளில் சிக்காமலிருக்க என்ன வழி என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்பான ‘கான்சர்ட் டிரஸ்ட்’ (Concert Trust) சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வுபெற்று, இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனாக (தீர்ப்பாயம்) இருந்த வி.ராமசாமி, பாலிசி தாரர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இன்ஷூரன்ஸில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, எதற்காக இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்தை அணுகுகிறார்கள் என்று கேட்டோம்.
தகவல்களை மறைக்காதீர்கள்!
”இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர் களில் சிலர் சிறு தவறுகளை செய்துவிடுகிறார்கள். உதாரணமாக, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது சில கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும். பாலிசிதாரரின் பழக்கவழக்கம், உடல்நலம் குறித்து கேள்வி கேட்கும். இதற்கான பதிலை உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆனால், பாலிசி எடுப்பவர்கள் சிலசமயங்களில் தவறான தகவலைத் தந்துவிடுகிறார்கள். அதாவது, ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை மறைத்துவிடுகிறார்கள். ஒருவர் உடல்நலம் குறைந்து, மரணம் அடைந்தால், அதற்கான காரணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஆராயும். அந்தசமயத்தில் மது அருந்தும் பழக்கத்தினால் பாலிசிதாரர் இறந்தார் என தெரியவந்தால், அவருக்குத் தரவேண்டிய க்ளைமை நிராகரிக்கும். ஒரு பாலிசிதாரர், பாலிசி எடுத்த இரண்டு வருடத்துக்குள் மரணம் அடைந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் துருவித்துருவி விசாரணை நடத்தும் என்பதை பாலிசிதாரர்கள் மறக்கக்கூடாது.
மூன்றாம் நபர் வாகன இன்ஷூரன்ஸ்!
அடுத்து, மூன்றாம் நபர் வாகன இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்பதால் பலரும் அதை எடுக்கிறார்கள். ஆனால், அந்த பாலிசியில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளை யாரும் படித்துப் பார்ப்பதில்லை. இதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதாவது, ஒரு வாகனம் திருடுபோன 48 மணி நேரத்துக்குள் காவல்துறைக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை எனில், அதையே காரணமாகக் காட்டி, இன்ஷூரன்ஸ் நிறுவனமானது க்ளைமை நிராகரிக்க வாய்ப்புண்டு. எனவே, இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் வாகனம் தொலைந்தவுடன் அதை இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்கும், காவல்துறைக்கும் தெரியப்படுத்துவது அவசியம்.
மருத்துவக் காப்பீடு!
மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, தாமதமாக க்ளைம் கிடைப்பது, க்ளைம் செய்த தொகையைவிட குறைவான தொகை கிடைப்பது, கேஷ்லெஸ் வசதி கிடைக்கவில்லை என்பது போன்ற பிரச்னைகள் குறித்து அதிக புகார்கள் வருகிறது.
அதாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சிகிச்சை பெற்றபின் க்ளைம் செய்யும்போது சில காரணங்களினால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் தொகையைக் குறைக்கும். பாலிசிதாரர் தேர்ந்தெடுக்கும் அறையைப் பொறுத்து க்ளைம் தொகை நிர்ணயிக்கப்படும். பாலிசியின் கவரேஜ் தொகையில் 1% அறை வாடகையாக இருக்கும். ஆனால், தனி அறையைத் தேர்வு செய்யும்போது, மருத்துவர் தனியாக வந்து பார்ப்பதால் கட்டணம் சிறிதளவு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.
எனவே, இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறை வாடகையை அடிப்படையாக வைத்து மருத்துவர் கட்டணம், மருந்து செலவு ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்புண்டு.
கேஷ்லெஸ் வசதி!
மேலும், சில மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதி இருக்காது. மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவ செலவுகளை நாம் முதலில் செய்துவிட்டு, பிற்பாடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து க்ளைம் பெற வேண்டியிருக்கும். இதுபற்றி டி.பி.ஏ.விடம் கேட்டால், அந்த மருத்துவமனை எங்கள் நெட்வொர்க்கில் இல்லை என எளிதாகச் சொல்லிவிடுவார்கள்.
இதனால் பாலிசிதாரரே பணத்தை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாகவும் சிலர் ஆம்புட்ஸ்மேனிடம் மனு செய்வார்கள். இதற்கு ஒரே தீர்வு, கேஷ்லெஸ் வசதிகொண்ட மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்ப்பது அல்லது நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை டி.பி.ஏ.வின் நெட்வொர்க்கில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வதுதான்.
யாரெல்லாம் அணுகலாம்?
இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்திடம் வரும் அத்தனை புகார்களிலும் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், சில பிரச்னைகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முடிவு சரியானதாகவே இருக்கும். மனு செய்பவரின் தன்மை, அவரது நிலைமை, மனுவில் கூறப்பட்டுள்ள காரணம் ஆகியவற்றைப் பொறுத்துதான் தீர்வு அமையும்.
ரூ.20 லட்சத்துக்குள் கவரேஜ் உள்ள தனிநபர் பாலிசிதாரரே தீர்ப்பாயத்திடம் தீர்வு கேட்டு மனு செய்ய முடியும். இங்கு மனு செய்வதற்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் குறைதீர்ப்பு மையத்துக்கு கடிதம் அல்லது மெயில் மூலமாக பிரச்னையை எழுதி அனுப்ப வேண்டும். கடிதமாக அனுப்பும்போது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். உங்கள் புகார் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் 30 நாட்கள் வரை எந்தவிதமான தீர்வும் எடுக்கவில்லை எனில், மேற்கொண்டு தீர்ப்பாயத்திடம் புகார் செய்யலாம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் கடிதத்தின் நகல், பாலிசி பத்திரத்தின் நகல், மருத்துவ செலவு செய்திருந்தால் அதற்கான பில் என அத்தனை ரசீதுகளின் நகல்களையும் இணைத்து தீர்ப்பாயத்திடம் மனு செய்யலாம். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. தீர்ப்பாயத்திடம் மனு செய்த 90 நாட்களுக்குள், அந்த மனுவை விசாரித்து அதற்கான தீர்வு என்ன என்பதை பாலிசிதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில், நேரடியாக ஐ.ஆர்.டி.ஏ தலைவருக்கு புகார் எழுதி அனுப்பலாம்” என்று முடித்தார் வி.ராமசாமி.
இனி, இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஆரம்பம் முதலே உஷாராக இருப்பீர்கள்தானே?
No comments:
Post a Comment