அவஸ்தையின் மறுபெயர் ஆஸ்துமா. மூச்சுக் குழாயின் உட்சுவர் வீக்கம் அடைதல் மற்றும் சளியை அதிக அளவில் சுரத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதையே ஆஸ்துமா என்கிறோம். இதனால், இருமல், வீசிங் பிரச்னையும் ஏற்படுகிறது.
சிலருக்கு இந்தப் பிரச்னை எப்போதாவது ஏற்படலாம். வேறு சிலருக்கோ இது வாழ்வையே பாதிக்கக்கூடிய, உயிரைப் பறிக்கக்கூடிய அளவு மிகக் கடுமையானதாக இருக்கும். ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், டாக்டரிடம் சென்று தொடர் மருத்துவ ஆலோசனையின்படி ‘இன்ஹேலர் தெரப்பி’ பெறுவதன் மூலம் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதன்மூலம் ஆஸ்துமா இல்லாதவர்கள் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
அறிகுறிகள்:
மிகக் குறைந்த அளவு முதல் மிகக் கடுமையானது வரை இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி வெளிப்படும் என்று கூற முடியாது.
பொதுவாக இதன் பாதிப்புகள், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும்.
பொதுவான சில அறிகுறிகள்…
சுவாசித்தலில் சிரமம்
நெஞ்சில் ஒருவித இறுக்கம்
இளைப்பு
இருமல் அல்லது இளைப்பு காரணமாகத் தூக்கமின்மை
மூச்சு விடும்போது விசில் அடிப்பது போன்ற மெல்லிய ஓசை (வீசிங்)
ஜலதோஷம் பிடித்திருக்கும்போது சுவாசிக்க சிரமப்படுதல்
காரணம்:
ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபியல்ரீதியான காரணங்களால் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
ஆஸ்துமாவுக்கான வாய்ப்பை அதிகரிப்பவை:
மகரந்தத் தூள், நாய், பூனையின் முடி, தூசி, புகை மற்றும் மாசு படிந்த காற்று,
அடிக்கடி ஜலதோஷம் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்த்தொற்று,
குளிர்ந்த காற்று, சிலவகையான மருந்துகளைப் பயன்படுத்துதல், அதிக மன அழுத்தம், உணவு ஒவ்வாமை.
ஆஸ்துமா அட்டாக்கைத் தவிர்க்க:
ஆஸ்துமா ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதன் மூலம், வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.
ஜலதோஷம், நிமோனியா போன்ற பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தவிர்க்க வேண்டும்.
சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment