”அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன” என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண்.
”சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இது முக்கிய மருந்து. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச்சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அனைத்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் சரி செய்யும். தோல் நோய்களைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடற்புண்களை ஆற்றும். கண்புரை நோய் மற்றும் உடல்வலியை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அருகம்புல்லை சாறாகவும், கசாயமாகவும் பயன்படுத்தலாம்.
அருகம்புல் சாற்றில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் இருப்பதால், இதனை அருந்தும்போது உடல் புத்துணர்வு பெறும். ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். வயதானாலும் இளமையான உடல்வாகும், தெம்பும் இருக்கும்.
அருகம்புல்லை இடித்து சாறாக்கி கண்களில் பிழிந்தால், கண் புகைச்சல் குணமாகும். மூக்கில் மூன்று சொட்டுக்கள் விட, மூக்கிலிருந்து வழியும் ரத்தம் நிற்கும்.காயம் பட்ட இடத்தில் அருகம்புல் சாற்றைப் பூச, காயம் விரைவாக ஆறும். தழும்பும் ஏற்படாது.
அருகம்புல் கசாயம் :
அருகம்புல் வேரைச் சுத்தப்படுத்தி, 10 மிளகு, காம்பு நீக்கிய வெற்றிலை ஒன்று சேர்த்து, 400 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். தண்ணீர் 50 மில்லியாக வற்றியதும், வடிகட்டி காலையில் குடித்துவந்தால், பூச்சிக்கடி, கொசு, வண்டு கடித்ததினால் தோலில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தோல் ஒவ்வாமையும் குணமாகும்.
அருகம்புல், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவுக்குக் குடித்துவர, தீராத வயிற்றுவலி குணமாகும்.
அருகம்புல் சாறு
அருகம்புல்லைப் பறித்தவுடன் சுத்தப்படுத்தி உரலில் இடித்தோ, அம்மியில் அரைத்தோ சாறு எடுக்கலாம். மசிவது கஷ்டம் என்பதால், வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அரைக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, எந்த நோயும் நெருங்காது. உடல் பருமன் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். இரவில் நல்ல தூக்கம் வரும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
அருகம்புல் சாறுடன், சிறிது மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால், நன்றாகப் பசியைத் தூண்டும்.
சாலையோரம்… சாறு!
சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் பாதை ஓரம், கழிவு நீரோடை ஓரம் கிடைக்கும் அதிகம் மாசு நிறைந்த அருகம்புல்லைப் பயன்படுத்தி சாறு விற்பனை செய்கின்றனர். இது, வராத நோய்களுக்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள். சில இடங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் விற்கும் நிலையும் இருக்கிறது. இதுவும் உடல் நலத்துக்குத் தீங்கையே விளைவிக்கும்.
சாறாக பயன்படுத்தும் மருந்துகளின் ஆயுட்காலம் ‘மூன்று மணி நேரம்’ மட்டுமே. மூன்று மணி நேரம் கடந்த அருகம்புல் சாறு பயனற்றதாக மாறும். அதனைக் குடிப்பதனால், எந்த பலனும் இல்லை.
No comments:
Post a Comment