Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Sunday, April 6, 2014

கொளுத்தும் வெயிலை வெளுத்துக் கட்டுவோம்!

சித்திரை மாதம் பிறக்கப் போகுறது. நெருப்பை அள்ளி மேலே கொட்டியது போல, கோடை வெயில் தகிக்கும். வெளியில் போக முடியவில்லை; வீட்டுக்குள் இருந்தாலும், வியர்த்துக் கொட்டும். தாங்க முடியாத தலைவலி வேறு பாடாய்படுத்தும். இந்தக் கோடையை, எப்படிச் சமாளிப்பது? பின்வரும் சில முறைகளை கடைபிடித்து வெயிலை சமாளியுங்கள்.
காலையில் எழுந்ததும், பச்சைத் தண்ணீரில் குளியுங்கள். பருத்தி உடை தான், வெயில் காலத்துக்கு ஏற்றது. இறுக்கமாக இல்லாமல், கொஞ்சம் காற்றோட்டமாக அணிந்து கொள்ளுங்கள். காலை சாப்பாடு எளிதாக இருக்கட்டும். இரவில் மிஞ்சிய சோற்றில், தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறும், இட்லி, இடியாப்பம் என்று, வேக வைத்த உணவும் உடலுக்கு நல்லது.
சைவ உணவு தான் வெயில் காலத்துக்கு ஏற்றது. சாப்பாடு எளிமையாக இருப்பதுடன், அரை வயிற்றுக்கு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலுக்கு, குளிர்ச்சி தரும் புடலங்காய், வெள்ளைப் பூசணி, கீரைகள், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொரித்ததை விட, குழம்பு நல்லது. அது தான், எளிதில் செரிமானம் ஆகும். மேலும், இக்காலத்தில் கிடைக்கும் எல்லா காய்கறிகளையும், சேர்த்துக் கொள்ளலாம்.
தாகம் அதிகமாக இருந்தால், அதற்கு காரணம் வியர்வை; வியர்ப்பதும் நல்லது. நம் உடல் சூட்டை, ஒரே நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம் என்று நாக்கு ஏங்கும். ஆனால், "குளுகுளு’ என்றிருக்கும், மண்பானை தண்ணீரே குடிக்க போதுமானது.
நன்னாரி சர்பத், ஆரஞ்சு சாறு பருகலாம்; எலுமிச்சை பழத்தை பிழிந்து, உப்பு அல்லது சர்க்கரை கலந்து பருகுங்கள். இளநீர், நீர் மோர் அருந்தலாம். மேலும், கொஞ்சம் புளியை கரைத்து, அதில், வெல்லம் கலந்து ஒரு டம்ளர் குடியுங்கள். அந்தக் காலத்தில், வெயில் காலத்தில், வெளியில் பந்தல் போட்டு, இந்த நீர் மோர் – புளி பானம் தான், இலவசமாக கொடுப்பர்.
நீரிழிவு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனிப்பு, ஐஸ்கிரீம், இளநீர் கூடாது. மோர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு உகந்தது.
நம் உடம்பிலிருந்து வியர்வை வெளியேறும் போது, உப்பும் வெளியேறும். அந்த உப்பை ஈடுகட்ட, மோர் அல்லது எலுமிச்சை சாறில், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் சரியாகி விடும். வெயில் காலம் முழுக்க, நாள்தோறும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது, களைப்பை போக்கி, புத்துணர்ச்சி தந்து, வியர் வையால் இழந்த தாதுக்களை ஈடுகட்டி விடும்.மேலும் இக்காலத்தில், கிடைக்கும் எல்லா பழங்களையும் சாப்பிடலாம். நீரிழிவுக்காரர்களுக்கு, மருத்துவர் அனுமதித்துள்ள பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.
வெயில் காலத்தில் ஏற்படும், தலைவலி சிலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு, அதிக தொல்லை தரும். இதற்கு, ஈரத்துணியை நெற்றியில் பற்று போட்டு, சிறிது நேரம் படுத்திருங்கள் சரியாகி விடும். மாலையில், குழந்தைகளுடன், காற்றோட்டமாக, கடற்கரை, பூங்கா என்று வெளியில் போய் வாருங்கள்.
வெளியில் செல்லும்போது, தலையில் தொப்பி அணிந்து செல்லுங்கள். குடையும், தண்ணீர் பாட்டிலும் கையில் வைத்திருங்கள். கண்களுக்கு குளிர் கண்ணாடி அணிவது அவசியம்.

No comments: