Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, December 12, 2014

மசாஜ் செய்கிற மாயம்


ஹெல்த் நாள் முழுக்க வேலை… அதன் காரணமாக அசதி… யாரேனும் கை, கால்களையோ, தோள்பட்டைகளையோ அழுத்திப் பிடித்து விட்டால் தேவலை எனத் தோன்றும். அப்படி யாரேனும் பிடித்து விட்டால் அத்தனை அசதியும் களைப்பும் மாயமாகும். உடனடி புத்துணர்வு பெறும் உடல். அதுதான் மசாஜ் செய்கிற மாயம்! அழகையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர மேம்படுத்துகிற அற்புத விஷயமான மசாஜ் பற்றி தெரிந்த, தெரியாத தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேதிக் தெரபி சென்டரின் மருத்துவர் அரவிந்த். ‘நோயில்லாத நிலை மட்டுமே ஆரோக்கியத்தின் அடையாளமில்லை.
உடல் மற்றும் மனத்தளவிலான முழுமையான ஷேமமான நிலையே உண்மையான ஆரோக்கியம்’ என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்திருக்கிறது. ஆயுர்வேதமும் அதையே முன்மொழிகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் மசாஜுக்கு முக்கிய இடமுண்டு. அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். சருமம் அழகு பெறும். ரத்த ஓட்டம் சீரடையும். ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாரம் தவறாமல் மசாஜ் செய்து கொள்கிறவர்களுக்கு முதுமைத் தோற்றம் தள்ளிப் போய், இளமை நீடிக்கும். உடல் சூடு அதிகமாவதன் விளைவாக சருமத்தில் பருக்கள், கட்டிகள், கொப்புளங்கள் கிளம்பும். ஸ்ட்ரெஸ் அதிகமிருக்கும் போது, அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமடையும்.ஒருவரின் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபத்தின் அளவுகளை அறிந்து, அதற்கேற்ற எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட லாம். முறையாக செய்யப்படுகிற மசாஜ் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதைப் போலவே, முறையற்று, தவறாகச் செய்கிற மசாஜ் எதிர்மறையான பலன்களைத் தரும் என்பதையும் மறக்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் எந்த எண்ணெயை வைத்தும் மசாஜ் செய்து கொள்ளக் கூடாது. மசாஜ் பழக்கத்தைப் பின்பற்ற முடிவு செய்தால், அதற்கு முன் ஆயுர்வேத மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரைக் கலந்தாலோசித்து விட்டு, சரியான எண்ணெயையும் மசாஜ் முறையையும் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. தன்வந்த்ர தைலம், பிண்ட தைலம் இந்த இரண்டும் உடல் சூட்டைத் தணித்து, சரும அழகை மேம்படுத்தக் கூடியவை. நால் பாமராதி தைலம், ஏலாதி தைலம் மற்றும் குங்குமாதி தைலம் ஆகியவையும் சரும அழகையும் நிறத்தையும் கூட்டக் கூடியவை. அதே போல பொடுகு, முடி உதிர்வது போன்ற கூந்தல் பிரச்னைகளுக்கு மாலத்யாதி தைலம், செம்பருத்தியாதி தைலம், துர்துற பத்ராதி தைலம் போன்றவை ஏற்றவை. மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களும், ஹார்மோன் பிரச்னைகள் உள்ளவர்களும் முறையான ஆலோசனை பெறாமல் ஆயில் மசாஜ் செய்யக் கூடாது. எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும். சளி பிடிக்காது. தன்வந்த்ர தைலத்தை 30 மி.லி. எடுத்து, வெதுவெதுப்பாக்கி, முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் உபயோகித்துக் குளிக்கவும். முதல் முறை இந்த எண்ணெய் குளியல் எடுப்பவர்கள் எண்ணெய் தேய்த்த உடனேயே குளித்து விடலாம். க்ஷீரபலா தைலம் என ஒன்று இருக்கிறது. இதை ரொம்பவும் குளிர்ச்சியாகவும் இல்லாமல், சூடாகவும் இல்லாமல் லேசான சூட்டில் தலையில் தடவிக் குளிக்கலாம். நல்லெண்ணெயில் நான்கைந்து மிளகு போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சி, தலையில் தடவிக் குளிக்கலாம். ரொம்பவும் சூடான உடல் வாகுள்ளவர்கள் தன்வந்த்ர தைலத்தையும் பலா அஷ்வகந்தா தைலத்தையும் சம அளவு கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, 30 நிமிடங்கள் காத்திருந்து, சீயக்காய் உபயோகித்து அலசலாம். மசாஜ் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்… திரைப்படங்களில் பார்க்கிற மாதிரி படபடவென்றோ, ஆக்ரோஷமாக அடித்தோ மசாஜ் செய்யக் கூடாது. மிகவும் மென்மையாக, அதிக அழுத்தம் கொடுக்காமல், தாங்கும் சக்திக்கேற்பவே மசாஜ் செய்ய வேண்டும். எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே மசாஜ் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் மசாஜ் செய்யக் கூடாது. மாதவிலக்கு நாட்களில் மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சொதசொதவென வழிகிற அளவுக்கு எண்ணெய் வைத்துதான் மசாஜ் செய்து குளிக்க வேண்டும் என்றில்லை. அளவாக உபயோகிப்பதுதான் சரியானது. கர்ப்பிணிகள் முதல் 3 மற்றும் இறுதி 3 மாதங்களில் மசாஜ் செய்து கொள்ளக்கூடாது. இடைப்பட்ட மாதங்களில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் பேரில் மிதமான மசாஜ் செய்து கொள்ளலாம். அது அவர்களுக்கு இடுப்பெலும்பு தசைகளைத் தளர்த்தி,வலி நீக்கி, சுகப்பிரசவத்துக்கு உதவும். அதே போல பிரசவத்துக்குப் பிறகு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் தளர்ந்து போன தசைகளை இறுகச் செய்யவும் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகள் இறுக்கம் பெறவும் செய்ய முடியும். இதய நோயாளிகள் மசாஜ் செய்யக் கூடாது. உடலில் ஏதேனும் வலி இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஓரளவு வெயில் இருக்கும் நேரம்தான் மசாஜுக்கும் எண்ணெய் குளியலுக்கும் ஏற்றது. உச்சி வெயிலுக்கு முன்பான நேரம் மிகவும் உகந்தது. வாரம் ஒரு முறையோ, இரு முறையோ எண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் எடுப்பது ஆரோக்கியம் காக்க உதவும்.

No comments: