Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, June 15, 2015

கர்ப்பப்பை கவனம்!

பெண்களுக்குக் கர்ப்பப்பையில் குறைபாடு இருப்பதும், இதனால், குழந்தை பிறக்காமல்போவதும் இன்று அதிகரித்திருக்கிறது. கர்ப்பப்பையில் எந்தப் பிரச்னை வந்தாலும், சரிசெய்யக்கூடிய அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. ஆனால், சிலசமயம், மருத்துவ ஆராய்ச்சியே வியக்கும் அளவுக்குப் புதிது புதிதாகக் குறைபாடுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

சுமதி என்ற 23 வயதுப் பெண்ணுக்கு, கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய், மற்றும் பிறப்புறுப்பு (Vagina) இந்த மூன்றும் ஒரு தடுப்புச்சுவரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மதுரை, ‘குரு மருத்துவமனை’-ன் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பி.கல்பனா கூறுகையில் “சென்ற மாதம் சுமதி எங்களிடம் வந்தார்.  கர்ப்பப்பையில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள, பல மருத்துவமனைகளை அணுகி இருக்கிறார். எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எங்களிடம் வந்திருந்தார்.
பொதுவாக, கர்ப்பப்பைக் குறைபாடுகள், 100 பெண்களில் ஆறு பேருக்கு இருக்க வாய்ப்பு உண்டு. சுமதிக்கு கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு மூன்றும் இரண்டாகப் பிரிந்து இருந்தன. இது, மிகவும் அரிதான ஒன்று. ‘’அமெரிக்கன் ஃபெர்ட்டிலிட்டி சொசைட்டி கிளாசிபிகேஷன் ஆஃப் முலேரியன் அனோமலியஸ்’’ என்ற குழு, சில கர்ப்பப்பைக் குறைபாடுகளை வரிசைப்படுத்தி உள்ளனர். அதில்கூட, சுமதிக்கு இருந்த குறைபாடு பற்றி எந்த விவரங்களும் இடம்பெறவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.

23 வருடங்களாக இந்தக் குறைபாடு அந்தப் பெண்ணுக்கு அறிய முடியாமல்போனதற்குக் காரணம், உடலில் தொந்தரவு எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம். இந்தப் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாயின்போது அதிக வலி இருக்கும். குழந்தையின்மை மற்றும் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம். குறைமாதத்தில் பிரசவம் ஏற்படலாம்.

சுமதிக்கு இருந்த குறையை ஸ்கேன், ஹெச்.எஸ்.ஜி. (HSG), எம்.ஆர்.ஐ.மூலமாகவும் கண்டறிய முடியும். இந்தக் குறைபாடு இருப்பதை, ஸ்கேன் மூலம் கண்டறிந்து, ஹிஸ்ட்ரோஸ்கோபி (Hysteroscopy) மூலமாக உறுதிப்படுத்தினோம். இப்படிப்பட்ட, அரிதான குறைபாடுகள் கொண்ட சுமதிக்கு, ஹெச்.எம்.பி.(HMP) எனும் ஹிஸ்ட்ரோஸ்கோபி (Hysteroscopy) அறுவைசிகிச்சை மூலம் தடுப்புச்சுவரை அகற்றினோம்.  இரண்டு இரண்டாக இருந்த கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய், மற்றும் பிறப்புறுப்பை ஒன்றாக்கினோம். இந்தக் குறைபாடால் தனியாக ஏதும் அறிகுறிகள் தெரியாது. எப்படி இது வருகிறது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, பெண்கள் வருடம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து கர்ப்பப்பை பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். சுமதிக்கு இந்தக் குறைபாடு திரும்பவும் வர வாய்ப்பு இல்லை. அவர் இனி இயற்கையாகவே குழந்தை பெற்றுகொள்ளலாம்” என்றார்.

No comments: