மூட்டுவலியை இளைய வயதினருக்கு வருவது, முதியவர்களுக்கு வருவது என இரண்டாகப் பிரிக்கிறது மருத்துவம். முதியவர்களுக்கு வயதின் காரணமாக மூட்டு தேய்ந்து மூட்டுவலி வருகிறது என்றால், இளம் வயதினருக்கு மூட்டுப் பிரச்னை வருவதற்கு முக்கிய காரணம், விளையாட்டு. போதுமான ஆரம்ப கட்ட பயிற்சிகளைச் செய்யாமல் திடீரென கடுமையாக விளையாடும்போது மூட்டில் கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பு பாதிக்கப்படும். கார்ட்டிலேஜ் என்பது மூட்டின் முனையில் உள்ள சவ்வு. மூட்டுகள் அசையும்போது அதிர்வுகளைத் தாங்கவும், உராய்வைத் தடுக்கவும் இது உதவுகிறது. விபத்து, காயங்கள், முறையற்ற பயிற்சிகள் போன்றவற்றால் இது பாதிக்கப்படும்போது மூட்டில் வலி ஏற்படும். இதற்கு மருந்து, மாத்திரை, பிசியோதெரபி, லேப்ராஸ்கோப்
சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எல்லோருக்கும் முழுமையான பலன் தரும் என உறுதி தர முடியாது. சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். இதன் பயன்பாடு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் இருக்கும். 60 வயதில் இந்த சிகிச்சையைச் செய்தால் 75 வயது வரை பலன் தரும். 30 வயதில் இதைச் செய்தால் 45 வயதில் மூட்டில் மீண்டும் வலி தொடங்கும். எனவே, இவர்களுக்காகவே இப்போது புதிதாக புகுந்துள்ளது ‘ஸ்டெம் செல் கார்டிலேஜ்’ சிகிச்சை’. இதை எப்படிச் செய்கிறார்கள்? ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் அடிப்படை ஆதார செல்கள். ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி ரத்தம் போன்றவற்றிலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்து, நம் தேவைக்கேற்ப எலும்பு, கார்ட்டிலேஜ், இதயம், கல்லீரல் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். மூட்டில் வலி உள்ளவர்களுக்கு இடுப்பு எலும்பிலிருந்து ரத்தத்தை எடுத்து ‘ஹார்வஸ்ட்’ எனும் கருவியில் வைத்து, ஸ்டெம் செல்களைப் பிரிக்கிறார்கள். அதே நேரத்தில், பயனாளியின் மூட்டுப்பகுதியில் இரண்டு மிகச் சிறிய துளைகளைப் போட்டு, அதன் வழியாக ஆர்த்ராஸ்கோப் கருவியை உள்ளே செலுத்தி, கார்ட்டிலேஜின் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்கிறார்கள். பிறகு அந்த எலும்பில் சிறு துளைகளைப் போடுகிறார்கள். இப்போது ‘ஹார்வஸ்ட்’டில் பிரித்தெடுக்கப்பட்டு தயாராக இருக்கிற ஸ்டெம் செல்களையும் ரத்தம் உறைய உதவுகிற வேதிப்பொருளையும் உள்ளே செலுத்துகிறார்கள். எலும்பில் துளை இடப்பட்ட இடங்களில் இந்தக் கலவை உள்வாங்கப்படுகிறது. இந்தக் கலவை உடனே உறைந்துவிடும் என்பதால் கார்ட்டிலேஜ் பகுதியில் ஒரு படிகம் உருவாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக கார்ட்டிலேஜ் திசுவாக வளரத் தொடங்குகிறது. அடுத்த ஒரு வருடத்தில் மூட்டில் அந்த இடம் முழுவதும் இயற்கையான கார்ட்டிலேஜ் திசுவாக மாறியிருக்கும். இதன் பலனால் மூட்டு வலி முற்றிலும் குணமாகும்.
Thank You
No comments:
Post a Comment