உயில் எழுதுவது முக்கியம் என்பதில் மிகை ஏதும் இல்லை. முறைப்படி எழுதப்பட்ட, சட்டப்படி செல்லக்கூடிய உயில்தான் உங்களுடைய சேமிப்புகளையும், சொத்துக்களையும் நீங்கள் விரும்பும் நபருக்கு, விரும்பும் காரணத்திற்கு உங்கள் மறைவிற்குப் பின் கொண்டுபோய்ச் சேர்க்கும். நீங்கள் உயில் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால் பிறகு சட்டம்தான் யாருக்கு எவ்வளவு போய்ச் சேரும் என்பதைச் சொல்ல வேண்டியதாகிவிடும். அதனால் உயில் எழுதுவென்பது நிதியைத் திட்டமிடுவதின் முக்கியமான பகுதியாகும். உயில், சொந்தமாகச் சேர்த்த சொத்துகளுக்கு மட்டும் தான் பொருந்தும். கூட்டுக் குடும்பம் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்களை உயில் எழுதக் கூடாது. உங்கள் பங்குக்கு உரிய சொத்துக்கு மட்டும்தான் உயில் எழுதலாம்.
உயில் எழுதி வைக்காவிட்டால் என்ன நடக்கும்.
நீங்கள் உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், உங்களுக்குக் குடும்பமோ உறவினர்களோ இல்லாத பட்சத்தில் சொத்தானது அரசாங்கத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை உங்களுக்கு வாரிசுகள் இருந்தால் சொத்துக்கள், உயில் எழுதாது இறந்துவிட்டவருக்கான சட்டப்படி பங்கு பிரித்துக் கொடுக்கப்படும். இவ்வாறு செய்வதற்கு அவர்கள் சட்ட ஆலோசனையை நாட வேண்டும்.. இது அதிக செலவாகிற விஷயமாக இருக்கலாம். உங்கள் சொத்திலிருந்து இதற்கான செலவை செய்யலாம். அனைத்து விஷயங்களையும் சரி செய்வதற்கு தாமதம் ஆனாலும் ஆகலாம். வங்கிக் கணக்குகள்கூட முடக்கப்படலாம்.. சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் உயில் எழுதாவிட்டால் உங்கள் நேசத்துக்குரியவர்கள் பிரிவுத் துயரத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களுக்குக் கடும் மன அழுத்தமும் பெரும் குழப்பமும் ஏற்படும். சொத்துரிமை விவகாரங்கள் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதற்கான செலவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
உயில் எழுதாமல் இறந்து போனவர்களுக்கான சட்டம் சிக்கலானது. இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
- நீங்கள் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் சொத்தானது வாரிசுதாரர் சட்டப்படி உங்கள் மனைவி, குழந்தைகள், அம்மா போன்ற பிற உறவினர்களுக்குப் போய்ச் சேரும்.
- பலர் தாங்கள் இறந்ததும் சொத்து தானாகவே கணவன் அல்லது மனைவிக்குப் போய்ச்சேருமென நினைக்கிறார்கள். சொத்துக்களை வாரிசுதாரர்களுக்குக்கிடையே சரி சமமாகப் பிரிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. சில சமயங்களில் இறந்தவர்களுக்கு நெருக்கமானவர்கள் முக்கியமாகக் கருதும் சொத்துக்களை விற்க வேண்டிவரலாம். சில சமயம் உங்கள் குழந்தைகள், அம்மா ஆகியோருக்குச் சட்டப்படி சேர வேண்டிய பணத்தைக் கொடுப்பதற்காக உயிரோடு இருக்கும் உங்க வாழ்க்கைத் துணை வசிக்கும் வீட்டைக்கூட விற்க வேண்டியிருக்கலாம். உங்களுக்கு வாரிசுகள் இல்லாவிட்டால் உங்கள் மரணத்திற்குப் பின் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்திற்குப் போய்விடும். உயில் இல்லாததால், உங்கள் சொத்தை அதற்கு உரிமை இல்லாத யாரோ அனுபவிக்கும் நிலையும் ஏற்படலாம்.
No comments:
Post a Comment